தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1960ஆம் ஆண்டு 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தொடங்கப்பட்ட தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி நாளடைவில் டெல்டா மாவட்டங்களுக்கான பிரதான மருத்துவமனையாக மாறியுள்ளது. தற்போது 1172 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக செயல்பட்டுவருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு உகந்ததாகவும் உள்ளது.
இதனிடையே, அண்மையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கும் வார்டு பகுதிகளில் நாய்கள் சுற்றி திரிவது போன்ற வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கூறுகையில், தெருக்களில் சுற்றித் திரிவது போல், வார்டு பகுதி்க்குள் நாய்களின் நடமாட்டம் இருப்பது சாதரணமாகிவிட்டது. இதுகுறித்து புகார் அளித்தும், மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.
மேலும், நோயாளிகள் பயன்படுத்தும் உணவு பொருட்களை தேடி நாய்கள் தொந்தரவு செய்கிறது என்றும் இதனால் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது, இதனால் அச்சத்துடன் இருக்கிறோம் எனவும் நோயாளிகள் கூறினர்.