மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கூரியூரைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,”தஞ்சை பெருவுடையார் கோயில் பிரகாரத்தில் 11ஆம் நூற்றாண்டில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்திரன் கோயில் அமைந்துள்ளது. ஆனால், பொதுமக்களின் வழிபாட்டிற்கு இதுவரை திறக்கவில்லை.
சங்க காலம் முதல் இந்திரன் வழிபாடு முறை உள்ளது. ஆனால், இங்கு வழிபாடும், பூசைகளும் நடக்கவில்லை. இது அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையை மீறும் செயலாகும். எனவே, நீதிமன்றம் தலையிட்டு பெருவுடையார் கோயிலில் அமைந்துள்ள இந்திரன் கோயிலை மக்கள் வழிபாட்டிற்கு திறந்துவிடுமாறும், சங்க காலத்தில் கொண்டாடப்பட்ட இந்திரவிழாவை நடத்துமாறும் உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தஞ்சை பெருவுடையார் கோயில் வழக்கறிஞர்,“தஞ்சை பெருவுடையார் கோயிலில் உள்ள இந்திரன் சந்நிதியில் உள்ள, இந்திரன் சிலை ஆங்கிலேயர் காலத்திலிருந்தே, மாயமாகி விட்டது. புதிதாக இந்திரன் சிலை வைப்பதற்கு, தொல்லியல் துறை அனுமதி வழங்க வேண்டும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என வாதாடினார்.
பின்னர், இந்திர வழிபாடு எப்போது இருந்து நடைபெறுகிறது அது குறித்த இலக்கியம், மற்றும் கல்வெட்டு தகவல் தெரிந்தால் இது குறித்து மனு தாரர் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும்,தஞ்சை பெருவுடையார் கோயில் தரப்பிலும் மனுதாரர் கோரிக்கை குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவ.1ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: தகுதி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீட்டிப்பா..? கண்டித்த உயர்நீதிமன்றம்