தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம், மேயர் ராமநாதன் தலைமையில் இன்று (ஏப்ரல் 27) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமமுக கவுன்சிலர் கண்ணுக்கினியாள், ''கடந்த 20ஆம் தேதி தஞ்சை கீழவாசல் பெரிய சாலை ரோடு பகுதியில் போடப்பட்டிருந்த ஆதாம் கால்வாய் தரைப்பாலம், தரம் அற்று கட்டப்பட்டு கீழே இடிந்து விழுந்தது.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி சார்பில் ஒப்பந்ததாரர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?'' எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு ஆதரவாக அதிமுக கவுன்சிலர்களும் கேள்வி எழுப்பினர். இதனிடையே, அதிமுக கவுன்சிலர் கேசவன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவையில் கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஆகியவை ஏற்பட்டது.
மேலும், திமுக கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் என்பவர், அதிமுக கவுன்சிலரை தள்ளி உள்ளார். இதனால் மேலும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு, ஒருவருக்கொருவர் சமாதானப்படுத்தி உள்ளனர். அதேநேரம், இதனைக் கண்டித்து அதிமுக, பாஜக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் மொத்தம் 9 பேர் கூடினர்.
முன்னதாக, மேயர் ராமநாதன் கூட்டத்தில் பேசும்போது, “திமுக ஆட்சியில் என்ன செய்யவில்லை? மற்ற மாமன்ற உறுப்பினர்கள் (திமுக) பேச வரவில்லையா? வாயில் என்ன இருக்கிறது?” என கேள்வி எழுப்பினார். பின்னர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேறியதாக மேயர் ராமநாதன் தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறினார்.
இதனையடுத்து அதிமுக, பாஜக மற்றும் அமமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனிடையே, இது குறித்த தகவல் அறிந்ததும் அதிமுக, அமமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்பட அக்கட்சிகளின் தொண்டர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு கூடி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த ஆணையர் சரவணகுமார், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தஞ்சாவூரில் பேப்பர் பொறுக்கிய பெண்ணை காலணியால் அடித்த நபர் கைது!