தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை ஞானாம்பிகை சமேத சாராபரமேஸ்வரர் திருக்கோயில் கடன் நிவர்த்தி தலமாக போற்றப்படுகிறது. இந்தக் கோயில் குலோத்துங்க சோழ மன்னன் காலத்தில் கட்டப்பட்டதாகும். மூலவர், சாராபரமேஸ்வரர், சுயம்பு மூர்த்தி ஆவர். தேவாரப்பாடல் பெற்ற 274 சைவத் திருக்கோயில்களில் இது 158வது கோயிலாகவும், தலவிருட்சமாக மாவிலங்கையாக விளங்குகிறது.
இந்தக் கோயிலில் வேறு எங்கும் காண முடியாதபடி சிவதுர்க்கை, வைஷ்ண துர்க்கை மற்றும் விஷ்ணு துர்க்கை என 3 துர்க்கைகள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். இங்கு பிரகாரத்தில் மார்கண்டேய மகரிஷியால் பிரதிஷ்டை செய்யப்பட்டதும், தௌமிய முனியவரால் வழிபட்டு பயன் பெற்ற ரிண விமோசன லிங்கேஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். இவருக்கு ஒவ்வொரு திங்கள்கிழமைதோறும் அதிகாலை, முற்பகல் மற்றும் மாலை என 3 முறை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறகிறது.
இதில் 11 வார திங்கள்கிழமை அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தால் தங்களுடைய பிறவி கடன் தீரும் என்பது ஐதீகம். மேலும், கடவுள் சாராபரமேஸ்வரரையும், இறைவி ஞானாம்பிகையையும் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் ஆண்டுதோறும் மாசி 13, 14 மற்றும் 15 என தொடர்ந்து 3 நாட்கள் பூஜிக்கும் சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.
இங்கு தலவிருட்சமாக விளங்கும் மாவிலங்கை மரம், வருடத்தில் 4 மாதங்கள் வெறும் இலைகளாகவும், அடுத்த 4 மாதங்கள் வெண்மை நிற பூக்களாகவும், அடுத்த 4 மாதங்கள் பூக்கள் மற்றும் இலைகள் ஏதும் இன்றி காணப்படும். இதனை வேறு எங்கும் காண முடியாது என்பது தனிச்சிறப்பு.
அதேபோல் தேவாரப்பாடல் பெற்ற இங்கு உள்ள பைரவருக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் இரவு வேளையில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். இந்த தேவாரப்பாடல் பெற்ற பைரவரை வழிபடுவதன் மூலம் காரிய அனுகூலம் ஏற்பட்டு, வழக்குகளில் வெற்றி கிடைத்து, நவகிரக தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
இத்தகைய பெருமை கொண்ட இந்த கோயிலில் இரவு ஆனி மாத வளர்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள் பொடி, சர்க்கரையுடன் பழக்கலவை, தேன், பால், தயிர், சந்தனம் என பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பட்டு வஸ்திரங்கள் சாற்றி, பலவகை நறுமண மலர் மாலைகளால் அலங்கரித்து, வடை மாலை சாற்றி, சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. மேலும் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணிக்காய், தேங்காய், அகல் விளக்கு ஆகியவற்றில் தீபங்கள் ஏற்றியும், அர்ச்சனைகள் செய்தும், பைரவரை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: ஆஷாட நவராத்திரி: கனிவகை அலங்காரத்தில் அருள்பாலித்த தஞ்சை பெரியகோயில் வாராஹி அம்மன்!