தஞ்சாவூர்: காந்திஜி சாலையில் பாண்டியவர்மன் என்பவர் அசோகன் தங்க மாளிகை என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகச் செய்கூலி சேதாரம் கிடையாது, நகை அடகு வைத்தால் வட்டி இல்லாமல் கடன் வழங்கப்படும். நகை சீட்டுப் போட்டால் குலுக்கல் முறையில் வீட்டுமனை வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து கடையை மூடிவிட்டுத் தலைமறைவாகி விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் நடந்தவை குறித்து தஞ்சை கிழக்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள நகைக்கடை உரிமையாளரை போலீசார் கைது செய்ய வலியுறுத்திப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள நகைக் கடை முன்பு நேற்று (பிப்.7) திரண்டனர்.
அப்போது திடீர் என சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துக் கூட்டத்தைக் கலைந்து போக செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மயங்கிய நிலையில் காவலர் உயிரிழப்பு - உயர் அதிகாரிகள் டார்ச்சரா?