தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அணைக்கரையில் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியக் குழு ஒன்றாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் ராஜேஸ்வரி லோகநாதன் என்பவரை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் பரப்புரை மேற்கொண்டார்.
அதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அவர், அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 40 லட்சம் நபர்களின் குடியுரிமை நீக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து 20 லட்சம் இந்துக்கள் மீண்டும் குடியுரிமை பெற்றதாகவும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்றும் கண்டனம் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தால் நாட்டின் மதச்சார்பின்மை சிதைந்து போகும் என்று கூறிய மணிசங்கர் அய்யர், மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழும் இந்தியாவை இந்து நாடாக மாற்றும் முயற்சியில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஈடுபட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து தன்னை நீக்கியது ஒரு யதார்த்தம் என்றும், டெல்லி ஜந்தர் மந்தரில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் தான் கலந்துகொண்டதாக குறிப்பிட்ட மணிசங்கர், காங்கிரஸ் தலைமை தன்னை ஒதுக்கி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.