தஞ்சாவூர்: மைசூர் விரைவு ரயில் மூலம் தருமபுரியிலிருந்து கும்பகோணத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கும்பகோணம் ரயில் நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அரசு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளைத் திறமையாகக் கையாண்டுள்ளது.
இதில் குறைபாடுகள் என எதுவும் சொல்ல முடியாது. சென்னையில் 17 மணி நேரம் புயல் மையம் கொண்டிருந்தது. இதை மழைப்பொழிவு என்று கூற முடியாது. மேகம் பிளந்து கொட்டியது என்று தான் கூற வேண்டும். 17 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தால் இந்தியாவில் சென்னை மட்டுமல்ல கல்கத்தா, டெல்லி என எந்த நகரமும் தாங்காது. இந்த மழை வெள்ள பாதிப்பு என்பது மனித தவறு காரணமாக ஏற்பட்டது அல்ல இயற்கை பேரிடர்.
இதில் தமிழக அரசு, எந்த அளவுக்குச் சீர் செய்ய முடியுமோ அந்த அளவிற்குச் சிறப்பாகச் செய்துள்ளது. இது பேரிடர் என்பதால் இந்திய அரசு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள 5 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும். 4 ஆயிரம் கோடி செலவினம் குறித்த கேள்விக்கு இதற்கு நம்மைப் போன்றவர்கள் பதில் அளிக்க முடியாது. ஆடிட்டர்கள் தான் அதற்குப் பதில் அளிக்க முடியும் எனத் தெரிவித்தார். இந்தியா கூட்டணி குறித்த கேள்விக்கு, உங்களைப் போல பளிச்சென்று இருப்பதாக நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக கும்பகோணத்திற்கு வந்த கே.எஸ்.அழகிரியை கும்பகோணம் ரயில் நிலையத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி.ஆர்.லோகநாதன் தலைமையில் மாநகர தலைவர் மிர்ஷாவுதீன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும், நாதஸ்வரம் மற்றும் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
கே.எஸ்.அழகிரி, கும்பகோணத்தில் சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு, கும்பகோணத்திலிருந்து அரியலூர் மாவட்டம் டி.பழூர் அருகே உள்ள சோழன்மாதேவி கிராமத்தில் மறைந்த கும்பகோணம் நாடாளுமன்ற உறுப்பினர் குடந்தை ராமலிங்கம் திருவுருவ சிலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.