தஞ்சாவூர்: ஒரத்தநாடு தாலுகா, ஆம்பலாப்பட்டு தெற்கு குடிக்காடு தெருவைச் சேர்ந்தவர், ஏசுராஜா. இவருடைய சகோதரர் சிவராஜன், கடந்த 15ஆம் தேதி அன்று இறந்துவிட்டார். இந்நிலையில், சிவராஜனின் இறப்புச் சான்றிதழ் கேட்டு ஏசுராஜா விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் முருகேசனை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது இறப்புச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் கேட்டதாக கூறப்படுகிறது. இந்த குரல் பதிவை தனது செல்போனில் (கால் ரெக்கார்டர்) ஏசுராஜா பதிவு செய்துள்ளார். அதில், ஏசுராஜா தனக்கு சான்றிதழ் நாளைக்கு கிடைத்துவிடுமா? என கேட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்த முருகேசன், “குத்துமதிப்பா கேட்டா, அப்புறம் வாரக் கணக்குல ஆகிடும். நாங்க வந்து உட்கார்ந்தால் தான் வேலை நடக்கும். ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டும்” எனக் கேட்டுள்ளார். பணம் கொடுத்துவிட்டால் நாளை கிடைக்குமா என ஏசுராஜா கேட்டதற்கு, ‘பணத்தை கொடுத்துட்டு போங்க; நாளைக்கு வாங்கிக்கலாம்’ என அவர் கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ஏசுராஜா புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: காதல் தம்பதி விபரீத முடிவு.. திருமணமான 2 மாதத்தில் நடந்தது என்ன?