தஞ்சாவூர்: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற பூண்டி மாதா பேராலயம் மற்றும் தஞ்சையில் உள்ள மற்ற தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சை திருக்காட்டுபள்ளியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூண்டி மாதா பேராலயம் பசிலிக்கா அந்தஸ்து பெற்றது. இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாக இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட மரத்தின் ஒரு துண்டு அருளியக்கமாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (டிச 24) இரவு, பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. நள்ளிரவு நடந்த சிறப்பு வழிப்பாட்டில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, பேராலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. இதைப் போல் தஞ்சாவூரில் 100 ஆண்டுகள் பழமையான தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசு கிறிஸ்து பிறப்பு விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்துவ ஆலயங்களில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வழிபாடு இரவு நடைபெற்றது.
தஞ்சாவூரில் உள்ள திரு இருதய பேராலயத்தில் மறை பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் கூட்டு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, தஞ்சை நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிறிஸ்துவ பெருமக்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் புத்தாடை அணிந்து பேராலயத்திற்கு வந்து வழிபட்டனர்.
மேலும் தஞ்சை நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பேராலயம், தூய இருதய ஆண்டவர் பேராலயம், குழந்தை யேசு ஆலயம் என அனைத்து ஆலயங்களும் அலங்கரிக்கப்பட்டு குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இயேசு பிறப்பை நினைவுகூரும் விதமாகக் குழந்தை இயேசு சொரூபத்தை மாதா வேடமணிந்த பெண் வான தூதர், சூசையப்பர் வேடம் அணிந்தவருடன் வந்து பரிபாலகரிடம் கொடுத்தார்.
அச்சொரூபத்தைப் பெற்றுக் கொண்டு, புனிதம் செய்து அலங்கரிக்கப்பட்ட திருப்பீடத்தில் வைத்தார். அப்போது, தேவாலயத்தின் மணி ஒலிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து மறையுரை, கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்றன. பின்னர், ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.
இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை: புனித சவேரியார் பேராலயத்தில் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை