தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இருந்து திருவிடைச்சேரி வரை சென்று வரும் தியாகராஜன் என்ற தனியார் பேருந்து கடந்த மே 17 ஆம் தேதி திருவிடைச்சேரியில் இருந்து கும்பகோணம் நோக்கி வரும் வழியில் கூகூர் ஆலத்தூர் சாலை அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது, துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் சென்றுகொண்டிருந்தனர்.
அவர்களுக்கு தனியார் பேருந்து வழி விடாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து நாச்சியார் கோவில் காவல் நிலையத்தில் நடத்துநர் அருண்குமார் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பேருந்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கூகூரைச் சேர்ந்த தமிழழகன், ரவிச்சந்திரன், பாண்டியன், மகேஷ் பாபு மற்றும் பவித்ரன் என்ற ஐந்து பேரை கைது செய்தனர்.
தாக்குதல் நடத்திய அரை மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தற்போது, பேருந்து நடத்துநரை தாக்கும் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பார்முலா மிஸ்சாகி நாட்டு வெடிகுண்டு வெடித்த விவகாரம் - பாம் ஸ்குவார்டு போலீசார் தீவிர சோதனை!