அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொள்ள தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கொள்ளிடம் ஆற்று வழியாக விசைப்படகின் மூலம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் கோயில் பூஜையை முடித்துவிட்டு நேற்று முன் தினம் மாலை விசைப்படகில் திரும்பி கொண்டிருந்தபோது, ஆற்றில் அதிக அளவு தண்ணீர் சென்றதாலும் படகில் 42 பேர் என அதிகளவிலான நபர்கள் பயணம் செய்ததாலும் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதனையடுத்து மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் ஒன்று சேர்ந்து 39 பேரை விபத்து நடந்த 11 ஆம் தேதி இரவு மீட்டனர். தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் கொள்ளிடம் ஆற்றில் தேடியதில் நேற்று பட்டு குடியைச் சேர்ந்த சுயம் பிரகாசம் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். மற்றுமொருபழனிசாமி என்பவரை தேடும் பணி தீவிரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 12ஆம் தேதி ராணி என்ற பெண் கொள்ளிடம் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.