தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள, பாபநாசம் கீழவீதியில், நேற்று (ஜூன் 23) இரவு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் பேசிய வானதி சீனிவாசன், “தமிழகத்தில் இன்று ஒவ்வொரு துறையிலும், லஞ்சமும், ஊழலும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. எங்களுக்கு வாக்களிக்காதவர்கள் ஏன் எங்களுக்கு வாக்களிக்கவில்லை என வருத்தப்படுவார்கள் என தமிழக முதல்வர் சொல்லிக் கொண்டுள்ளார்.
ஆனால் உண்மையில் அவர்களுக்கு, வாக்களித்தவர்கள் எல்லாம் இப்போது ஏன் வாக்களித்தோம் என்று எண்ணும் அளவுக்கு தான் திமுக தலைமையிலான தமிழக அரசு நடந்து வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள்.
இப்போதும் நீட் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது ஒரு சில இடங்களில் தவறாக வழிநடத்தக் கூடிய மாணவர்கள் உயிரிழப்பது துரதிஷ்டவசமானது. நீட் தேர்வு திமுகவிற்கு ஒரு அரசியல் அஸ்திரம். இப்போது நீட் தேர்வு பற்றி திமுக வாய் திறப்பதில்லை. நீட் தேர்வால் உயிரிழந்த மாணவரின் வீட்டிற்கு இப்போது உதயநிதி ஸ்டாலினை செல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம், “திருக்குரானில் அல்லா என்ற வார்த்தை அதிகமாக வருகிறது. அதற்கு அடுத்து அதிகமாக கல்வி என்கிற வார்த்தை தான் அதிகமாக உள்ளது. நீங்கள் அல்லாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுங்கள் என அமெரிக்காவிற்கு செல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி கூறினார்.
ஜவாஹிருல்லா போன்றவர்கள் அகற்றப்பட்டால் பயங்கரவாதம் ஒழியும். தமுமுக என்ற அமைப்பை உருவாக்கி தமிழகம் முழுவதும் முஸ்லிம்களை தவறாக வழி நடத்தியவர். தமுமுக என்ற அமைப்பை உருவாக்கியது திமுகவை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்களை திமுகவிற்கு எதிராக போராடச் செய்து இன்று நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஆனால் அதே திமுகவில் இரண்டு எம்எல்ஏ சீட்டிற்காக மனித நேய மக்கள் கட்சி என்ற கட்சியை உருவாக்கி திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெறுகிறார்” எனப் பேசினார்.
முன்னதாக ஒன்பது ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், தேசிய பொதுக்குழு உறுப்பினர் தங்க.வரதராஜன் உட்பட பலர் பேசினர். இந்த பொதுக் கூட்டத்தில் பாஜக மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், மகளிர் அணியினர் என பலரும் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீதான ஊழல் குற்றச்சாட்டு உண்மைதான் - சிபிஎம் பாலகிருஷ்ணன்