தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவஹிருல்லா தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், "தமிழ்நாடு மக்களின் நலன்களை பாதுகாக்காமல் மத்திய அரசின் கொள்கைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் அதிமுக அரசு அக்கட்சியின் அதிமுக கொடியில் அண்ணாவின் படத்தை அகற்றிவிட்டு மோடியின் படத்தை போட்டுக் கொள்ளலாம்.
மேலும் தமிழ்நாடு அரசு ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற கொள்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அதேபோல் மத்திய அரசு இந்தியை திணிப்பது நாட்டின் பன்முகத்தன்மையை கெடுத்துவிடும் மத்திய அரசு இந்தித் திணிப்பைத் தவிர்க்க வேண்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை, பன்முக கலாசாரத்தை சிதைக்கக்கூடிய இந்தித் திணிப்பை தவிர்க்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் மக்களோடு சேர்ந்து மனிதநேய மக்கள் கட்சி இந்தியை விரட்ட போராட்டம் நடத்தும்" என்றார்.