தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி - மேலையூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த கண்ணன் மனைவி விஜயா. இவர் அந்தக் கிராமத்தில் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தூய்மைப் பணி செய்து விட்டு, வீட்டுக்குச் சென்றபோது அவரது வீட்டின் அருகில் இருக்கும் ராமன் மனைவி மல்லிகாவும், அவரது மகன் அருண் என்பவரும் சேர்ந்து தூய்மைப் பணியாளர் விஜயாவை தரக்குறைவாகப் பேசி, தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விஜயா ஒரத்தநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஒரத்தநாடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மல்லிகாவையும், அவரது மகன் அருணையும் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் பெரிதும் மனமுடைந்து காணப்பட்ட பெண் தூய்மைப் பணியாளர் விஜயா செய்வதறியாது தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மேலும் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும், தூய்மைப் பணியாளர்களை மத்திய, மாநில அரசுகள் கெளரவப்படுத்தி அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்து வரும் நிலையில், இந்தச் சம்பவத்திற்குத் தன்னார்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரணப் பொருள் வழங்கிய காவலர்கள்!