தஞ்சாவூர்: தமிழ்நாடு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் உள்ள அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதியம் 12 மணிக்கு வருவதாகத் தகவல் தெரிவித்திருந்தனர். அந்த நிலையில் அமைச்சர் வருவதற்காக ஸ்கேட்டிங் மாணவ, மாணவிகள் காலையிலேயே வந்து காத்திருந்தனர். ஆனால் உதயநிதி ஸ்டாலின் மதியம் 2.30 மணியளவில் பொறுமையாக்கக் காலதாமதமாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அதுவரை சுட்டெரிக்கும் வெயிலில் ஸ்கேட்டிங் மாணவ மற்றும் மாணவிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
அதில் பல மாணவ, மாணவிகள் சோர்ந்து போய் மைதானத்திலேயே உட்கார்ந்து இருந்தனர். ஆனால் ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தில் கல்வெட்டு திறப்பதற்காக அவசர அவசரமாக தற்காலிக கல்வெட்டு ஒட்டப்பட்டது. அதனைத் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கல்வெட்டு ஒட்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தார். மேலும் தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க மாவட்ட கழகம் சார்பில் நகரம் முழுவதும் விளம்பர ப்ளக்ஸ், இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட 10 அடி உயரத்திற்கான கொடிகள் ஆகியவை ஆங்காங்கே கட்டப்பட்டிருந்தன.
இந்த செயல் தற்போது தஞ்சாவூர் மாநகராட்சியில் விதிமுறைகளை அரசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி இந்தக் கொடிக்கம்பங்கள் நகரம் முழுவதும் காணப்படுகின்றன. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் சீர்மிகு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளான நுழைவுவாயில், நடைபாதை, சறுக்கு தளம், கைபந்து விளையாட்டு மைதானம், ஸ்கேட்டிங் மைதானம் ஆகியவற்றை விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட அளவிலான மகளிருக்கான வாலிபால் போட்டியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.பி பழனி மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தேர்வில் ஆள் மாறாட்டம்: ஹரியானா மாநில இளைஞர்கள் கோவையில் கைது!