தஞ்சாவூர்: கும்பகோணத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு, இன்று (செப்.14) தமிழகத்தின் முதல் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை நிகழ்வில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேட்டியளித்தார்.
அப்போது அவர், "விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது கிறிஸ்துவ மதத்தைத் தழுவியுள்ளதால், அவர் திமுகவை கிரிட்டோ கிறிஸ்துவ முன்னேற்ற கழகமாக மாற்ற முயற்சி செய்கிறார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனமாக இருக்க வேண்டும்.
திராவிட மாடல் ஆட்சியில் சனாதனம் என்ற வார்த்தை ஏதோ தடை செய்யப்பட்ட வார்த்தை என்பதைப் போல காவல்துறையினர் அந்த பெயரில் போஸ்டர் அடிக்கக் கூடாது, விநாயகருக்கு அந்த பெயர் சூட்டக்கூடாது என கெடுபிடி செய்கிறார்கள். விநாயகர் சதுர்த்தி விழா எப்போதுமே அரசியல் கலப்பு இன்றி, ஆன்மீக கலாச்சார விழாவாகவே கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு, ஆட்சியாளர்களே இவ்விழாவினை அரசியல் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
மேலும், ஒரு காலத்தில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தியவர்கள் தற்போது ஆட்சி அதிகாரம் கையில் இருப்பதால் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்கள். மாறாக ரமலான், கிறிஸ்துமஸ் ஆகியவை தான் அரசியல் கட்சிகளால், அரசியல் விழாக்களாக நடத்தப்படுகிறது" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் தற்போது பீக் அவர் என்ற பெயரில் பல மடங்கு அதிக மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது இதனால் சிறு தொழில்கள் முதல் பெரும் தொழில்கள் வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது, அதுபோலவே, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களும், ஊழியர்களுக்குச் சம்பளம் போடக்கூட முடியாமல் பெரும் நஷ்டத்தில் தள்ளாடுகிறது.
இதனால், ஊழியர்களுக்குச் சம்பளம் போட ஓடுகின்ற பேருந்துகள் மீதும், இருக்கின்ற பணிமனைகளை வங்கியில் அடமானம் வைத்தும் கடன் பெறுகின்றன. தமிழகத்தில் போடுகின்ற ஒப்பந்ததாரர்கள் போடும் புதிய சாலைகள், புதிய கட்டிடங்கள் தேவையான அளவு சிமெண்ட், கம்பி பயன்படுத்தாததால், தரமற்று இருக்கின்றன இதற்கு காரணம் ஊழலும், ஒழுங்கீனமும், நிர்வாக குளறுபடிகளும் தான். அதனை சீர்படுத்த, கண்காணித்து நடவடிக்கை எடுக்கத் தமிழக முதல்வர் முயற்சிக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: "மனித வளத்தை ஏவியேஷன் துறையில் மேம்படுத்த முத்தரப்பு ஒப்பந்தம்" - பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்!