தஞ்சாவூர்: உலகின் மிக பிரசித்தி பெற்ற கோயிலாக தஞ்சை பெரிய கோயில் இருந்து வருகிறது. இந்த கோயில் தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரியச் சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்தக் கோயிலில் மராட்டா நுழைவு வாயில், கேரளாந்தகன் கோபுரம், இராஜராஜன் கோபுரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோபுரங்கள் புகழ் பெற்றவை.
ஸ்ரீ பெருவுடையார், ஸ்ரீ பெரியநாயகி அம்மன், ஸ்ரீ மஹாவாராஹி அம்மன், விநாயகர், முருகன், நடராஜர், தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளும், மஹாநந்தியம் பெருமான் தனி சன்னதியும் உள்ளன. இக்கோயில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது.
இதில் ஸ்ரீ பெருவுடையார் சன்னதி, ஸ்ரீ பெரியநாயகி அம்மன் சன்னதி, திருச்சுற்று மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சன்னதிகள் மற்றும் பெரிய கோயிலில் கட்டடங்களின் எல்லா பகுதிகளிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இந்த கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் படியெடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் உள்ள தனியார் மாலில் தீ விபத்து - ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்!
அவ்வாறு கல்வெட்டுகள் படியெடுத்து வைக்கப்பட்டு ஆவணங்கள் அழிந்தாலோ அல்லது சிதைந்து விட்டாலோ ஆண்டுக்கு ஒரு முறை அவற்றை சரிபார்த்து, தேவைப்பட்டால் மீண்டும் படியெடுத்து ஆவணப்படுத்துவது வழக்கம். அதன்படி, ஆவணப்படுத்தியதில் அழிந்த கல்வெட்டு படிகளை மீண்டும் படியெடுத்து ஆவணப்படுத்துவதற்காக, தொல்லியல் துறையினர் தற்போது தஞ்சை பெரிய கோயிலில் முகாமிட்டுள்ளனர்.
இதற்காக கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த 8 பேர் கொண்ட குழுவினர், முகாமிட்டு கல்வெட்டுகளை படியெடுத்து வருகின்றனர். இவர்கள் கடந்த சில நாட்களாக பெரிய கோயிலில் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த கல்வெட்டுகளை படியெடுப்பதில் உள்ள சிரமங்களை போக்கும் வகையில், அதில் படிந்துள்ள பறவைகளின் எச்சங்கள், அழுக்குகளை சுத்தப்படுத்தி, அதன் பின்னர் படி எடுத்து வருகின்றனர்.
இது குறித்து தஞ்சையைச் சேர்ந்த தமிழ் பண்டிதர் மணிமாறன் கூறுகையில், “பழமைக்கும், புதுமைக்கும் பாலமாக வரலாறு திகழ்கிறது. கல்வெட்டுகள் மூலம்தான் வரலாறுகளை தெரிந்து கொள்ள முடிகிறது. பொதுமக்களிடம் வரலாற்றைப் பற்றிய விழிப்புணர்வு அதிக அளவில் இல்லை.
ஆனால் தற்போது மாணவர்கள், படித்த இளைஞர்கள், தகவல் தொழில்நுட்ப மாணவர்கள் ஆகியோரிடம் கல்வெட்டுகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு உள்ளது. முன்னோர்கள் குறித்த வரலாற்றை தெரிந்து கொள்ள கல்வெட்டுகள் உறுதுணையாக உள்ளன. ஆகவே, பொதுமக்கள் கல்வெட்டினை சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.