கீழடியில் தமிழ்நாடு வாழ்வும் வரலாறும் என்ற தலைப்பில் சிந்தனை மேடை நிகழ்ச்சி தஞ்சையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். இதில், தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அவர், 'தமிழ்நாடு தொல்லியல்துறை கீழடியில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை முடித்துள்ளது. 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட கீழடியில் இதுவரை ஐந்து ஏக்கர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கீழடியின் அனைத்துப் பகுதிகளும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால்தான் தமிழ்நாட்டின் வரலாற்றை முழுமையாக அறியமுடியும்' என்றார்.
'கீழடியின் ஆய்வுகளை எந்த அரசாக இருந்தாலும் தொடரவேண்டும். தற்போது 10 விழுக்காடு ஆய்வுகள்தான் முடிவடைந்துள்ளது. குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் கீழடியில் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்' எனவும் அவர் கூறினார்.
மேலும், வைகை நதி மட்டுமல்லாமல் காவிரி, தாமிரபரணி, பாலாறு உள்ளிட்ட நதிகளையும் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும். தமிழர்களுக்கு வேறு நாகரிகங்களோடு தொடர்பு உள்ளதா என்பதைக் கண்டறிய இவ்வகையான ஆய்வுகள் விரிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்தே தொடங்கப்படவேண்டும் - ஸ்டாலின் வலியுறுத்தல்!