தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கொள்ளுக்காடு ஊராட்சிக்குட்பட்ட பகுதி அந்தோணியார்புரம். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இப்பகுதியில், இவர்கள் மீன்பிடித் தொழிலே பிரதானத் தொழிலாக உள்ளது. இவர்களுக்கு 1986ஆம் ஆண்டு மீன்வளத்துறை மூலம் 65 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
வீடுகள் கட்ட கொடுக்கப்பட்டு 33 வருடங்கள் ஆகிவிட்டதால், இந்த வீடுகள் அனைத்தும் பழுதாகி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. குடும்பங்கள் அதிகரித்துவிட்டதால், குடிசைகளும் அதிகமாகியுள்ளன. இதனால் இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
பழுதாகியுள்ள வீடுகளைப் புதுப்பித்து தரவேண்டும், வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட வேண்டும் என மீனவர்கள் சார்பாக மாவட்ட ஆட்சியர், மீன்வளத்துறை அலுவலர்கள் உள்ளிடோரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகார் குறித்து இதுநாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
ஆனால் இதேபோன்று பிள்ளையார் திடல், சின்ன மனை, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் 1986ஆம் ஆண்டு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளை புதுப்பித்துக் கொடுத்துவிட்டு அந்தோணியார்புரம் மீனவர் குடியிருப்புகளை மட்டும் புதுப்பித்துத்தராமல் எங்களைப் புறக்கணிக்கின்றனர் என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகவும் அந்தோணியார்புரம் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் எதிரொலி: அதிமுக ஒன்றியச் செயலாளரை கூலிப்படை ஏவி கொல்ல முயற்சி!