தஞ்சாவூர் மாவட்டத்தில், “அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம்” சார்பில், மாவட்ட ஊழியர்கள் பங்கேற்ற “சிறப்பு கருத்தரங்கம்” இன்று (ஆகஸ்ட் 26) ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. மேலும், கருத்தரங்கில் “மூன்றாம் உலகப்போரும், உலக சமாதானமும்” என்ற தலைப்பில், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத், கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள், கடுமையாக முயற்சி செய்து சந்திரயான் 3 விண்கலத்தை அனுப்பி நிலவில் லேண்டர் செய்து, இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்ததுடன் மிகப்பெரிய வரலாற்று சாதனையையும் படைத்துள்ளனர்”.
மேலும், “நிலவில் லேண்டர் இறங்கிய இடத்திற்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி, “சிவசக்தி” என்று பெயரிட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா மதசார்பற்ற நாடு, இந்திய நாட்டு மக்கள் பன்முகத் தன்மை கொண்டவர்கள். இந்நிலையில், இந்திய நாட்டின் மிகப்பெரிய அறிவியல் சாதனையை, தனிப்பட்ட மதத்திற்கு உரியதாக மாற்றக் கூடிய வகையில், “இந்துத்துவா” அரசியல் செய்வது என்பது ஏற்புடையது அல்ல. மேலும், விண்கலம் சென்றடைந்த போது வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டதும் சர்ச்சைக்குரியது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்திய பிரதமர் பிரிக்ஸ் மாநாட்டில், சீன அதிபரை சந்தித்தது இந்தியா, சீனா உறவு மேம்பட உதவிகரமாக இருக்கும். ஆனால், அமெரிக்கா தொடர்ந்து ஆசியா, பசிபிக் பகுதியில் ராணுவத்தை குவித்து, போரை உருவாக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறது. அதனை, இந்திய அரசாங்கம் புரிந்து கொண்டு ராணுவ பகுதியில் இருந்து வெளியேறி ஆசியா, பசிபிக் பகுதியை சமாதான மண்டலமாக அறிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், “அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகம், மிகப்பெரிய மாநாட்டை டெல்லியில் நடத்த உள்ளது. எனவே, வாக்கு வங்கி அரசியலை நோக்கமாகக் கொண்டு இந்திய நாட்டு மக்களை மத ரீதியாக, இன ரீதியாக, மொழி ரீதியாக பிரிக்கக் கூடிய சூழ்ச்சியை, பிஜேபியும், சங் பரிவார் அமைப்புகளும் கைவிட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், இந்தியா முழுவதும் போராட்டங்களை நடத்துவோம்” என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, நிர்வாகிகள், “பெண்ணடிமையும் சமாதான சக வாழ்வும்” , “இன்றைய நமது கடமைகள்”, “மணிப்பூர் அவலங்களும், படிப்பினைகளும்” என்ற தலைப்பில் கருத்துரை ஆற்றினார்கள். மேலும், இக்கருத்தரங்கில் சமாதான ஒருமைப்பாட்டு கழக நிர்வாகிகள் வீரபாண்டியன், செல்வகுமார், சாந்தி, பாஸ்கர், சிவஞானம், சுந்தரமூர்த்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் உத்திராபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: Madurai Train Accident: மதுரை ரயில் விபத்து; உயிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்; தலா ரூ.3 லட்சம் நிதியுதவி!