தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த அம்மன்பேட்டையில் தேர்தல் விதிப்படி அனைத்துக் கட்சியினரும் அவரவர்கள் கட்சி சின்னங்கள் மற்றும் தலைவர்கள் சின்னங்களை மூடிவிடவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் அம்மன்பேட்டையிலிருந்து அண்ணாசிலை, எம்ஜிஆர் சிலைகளை மூடிவிட்டு கொடிக்கம்பங்களை அகற்றிவிட்டனர்.
ஆனால், திமுகவினர் அம்மன்பேட்டை மெயின்ரோட்டில் ராஜேந்திரம் ஆற்காடு செல்லும் வழியில் உள்ள சூரியன் படம்போட்ட வளைவு, அம்மன்பேட்டை பைபாஸ் ரவுண்டானாவில் உள்ள கொடிக்கம்பம் ஆகியவற்றை மூடவும் இல்லை, எடுக்கவும் இல்லை. இதை அதிமுகவினர் கிராம நிர்வாக அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர். அவர்கள் அதனை தாசில்தாரிடம் கூறுமாறு கூறியுள்ளனர்.
இதனால், ஒருதலைபட்சமாக செயல்படும் கிராம நிர்வாக அலுவலரை இடமாற்றம் செய்ய வேண்டும், திமுக சின்னமான சூரியனை மறைக்க வேண்டும், கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் எனும் கோரிக்கைகளுடன் அதிமுகவினர் தஞ்சாவூர்-திருவையாறு நெடுஞ்சாலை அம்மன்பேட்டையில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி தலைமையில் சாலை மறியல் செய்தனர்.
தகவலறிந்து அங்கு சென்ற திருவையாறு காவல் துறையினர், துணைக் காவல் கண்காணிப்பாளர் சித்திரவேல், திருவையாறு தாசில்தாரும், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலருமான நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க...17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!