தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள உடையாளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 11 பேர் கொண்ட நிர்வாகக் குழுவினர் தேர்தலில் அதிமுகவினரிடம் மட்டுமே வேட்பு மனுக்களைப் பெற்று வெற்றிபெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து, அமமுகவினர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அந்த நிர்வாகக் குழுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு ஜுலை மாதம் 28ஆம் தேதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலன்று அதிமுக, அமமுக மற்றும் திமுகவினரிடையே கைகலப்பு, கல் வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெற்றன. இதனால் அமமுகவினரின் புகாரை ஏற்று அந்த தேர்தலும் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இன்று நிர்வாகக் குழு தேர்தலை நடத்த கூட்டுறவுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டதையடுத்து, அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
இந்தக் கூட்டுறவு சங்கத்தில் மொத்தம் ஆயிரத்து 904 பேர் அங்கத்தினர்களாக உள்ளனர். 11 பேர் கொண்ட நிர்வாகக் குழுவை தேர்தெடுக்க அதிமுக, அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 34 பேர் போட்டியிடுகின்றனர். காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.