தஞ்சாவூர்: கடிச்சம்பாடி ஊராட்சி, தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இங்கு பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல், அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மலர்கொடி சீனிவாசன் பல்வேறு ஊழல், முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, கடிச்சம்பாடி ஊராட்சியைச் சேர்ந்த துணைத் தலைவர் சிவ பாலன்(பாமக) தலைமையில், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுடன் திரண்டு கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெறுவதையொட்டி அலுவலகத்திற்குள் யாரும் அத்துமீறி நுழைந்து விடக்கூடாது என்பதற்காக பேரிகார்டுகளை அமைத்தும், கேட்டை இழுத்து மூடியும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நாச்சியார்கோயில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இங்கு போராட அனுமதி மறுக்கபட்டுள்ளது. அதனால் போராட்டத்தை கைவிடுங்கள் என தெரிவித்தனர். அதற்கு போராட்டக்காரர்கள், அடிப்படை தேவைக்காக பேராட வந்துள்ளோம் எனக் கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் விரைவில் கடிச்சம்பாடி ஊராட்சியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி உத்தரவிட்டதை தொடர்ந்து, போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்குப் பிறகு சேலத்தில் விமான சேவை தொடக்கம்!