தஞ்சாவூர்: திருவையாறு அடுத்த மருவூரில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் இருந்து பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டுநர் வீரமணி (48) டிப்பர் லாரியில் மணல் ஏற்றிக்கொண்டு திருவையாறு வழியாக தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
நடுக்கடை மெயின் ரோட்டில் மணல் லாரி சென்றபோது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த கடையில் மோதி அருகே நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அங்கிருந்த மீராமைதீன் (50), முகமது ரபீக் (48), சாகுல் ஹமீது (45), செல்வம் (38), ரஜியா பேகம் (40), லாரி ஓட்டுநர் வீரமணி ஆகிய 6 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, தீவிர சிகிச்சையில் இருந்த ரஜியா பேகம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த லாரி விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம்.. தீவிர கண்காணிப்பில் காவல்துறை