கொஞ்சம் பொறுங்கள் ! கல்லணை கால்வாயில் கால் நனைக்கும் முன் மேட்டூர் அணையைக் கொஞ்சம் எட்டிப் பார்த்து விடுவோம். கடந்த 1834ஆம் ஆண்டு ஆர்தர் காட்டன் என்ற வெள்ளையர் மேட்டூரில் அணை கட்ட முடிவெடுத்தார். அதற்கு அப்போதைய மைசூர் சமஸ்தானம் ஆட்சேபம் தெரிவித்தது.
சில பல முட்டுக்கட்டைகளுக்குப் பின், கடந்த 1923 ஆம் ஆண்டு மைசூரிடம் ஒப்புதல் பெற்று அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த முறை ஒருங்கிணைந்த தஞ்சாவூர் விவசாயிகளின் வேண்டுகோளுக்கிணங்க, மைசூர் அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியவர், சர்.சி.பி. ராமசாமி அய்யர்; திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானான இவரது பூர்வீகம் தஞ்சாவூர்.
காவிரி பாசனத்தால் தஞ்சை வளங்கொழிக்கும் பூமியாக இருந்தாலும், மேட்டு நிலமான தெற்கு தஞ்சை வானம் பார்த்து ஏங்கும் புஞ்சை பூமியாகவே இருந்தது. காவிரியைப் பிரித்து தெற்கு தஞ்சைக்குள் ஒரு ஆற்றைக் கொண்டு செல்ல விரும்பிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், கல்லணையிலிருந்து கால்வாய் ஒன்றை வெட்டும் திட்டத்தைத் தீட்டினார். அவரின் திட்டத்திற்கு வடிவம் தந்தார் மேட்டூர் அணையை வடிவமைத்த கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ்.
இங்கிலாந்தின் தெருக்களுக்குள் துள்ளியோடும் தேம்ஸ் நதியை மாதிரியாகக் கொண்டு, தஞ்சை தெருக்களுக்குள் ஓடுமாறு கல்லணை கால்வாயை வடிவமைத்தார் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ். மேட்டூர் அணை கட்டப்பட்ட அதே காலக்கட்டத்தில் இக்கால்வாய் வெட்டும் பணியும் தொடங்கி, 1934 ஆம் ஆண்டில் நிறைவடைந்தது.
கல்லணையின் தெற்கு பகுதியிலிருந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது மன்னர் காலத்திற்குப் பின்னர் வெட்டப்பட்ட பெரிய இந்த பாசன ஆறு. இக்கால்வாய் தஞ்சை நகருக்குள் வராமலேயே, ஆலக்குடியிலிருந்து தெற்கு நோக்கி தன் திட்டமிட்ட பயணத்தைத் தொடர்ந்திருக்க முடியும். சர்.சி.பி. ராமசாமி அய்யரின் பேரவாவால், தஞ்சை பெரிய கோயிலின் அகழியை முத்தமிட்டு, நகருக்குள்ளும் ஓடிச் செல்கிறது இந்தப் புது ஆறு.
கல்லணையின் தலையணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையில் 149 கி.மீ. ஓடிக் கலக்கும் இந்த புது ஆறு மனித முயற்சியின் மாபெரும் சாதனை என்றால், இதன் கட்டுமானத் தொழில் நுட்பம் மனிதனின் கற்பனை வளத்தின் உச்சம்! எல்லா நீரோட்டங்களும் மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி ஓடிச் செல்வது இயற்கையின் விதியென்றால், மனிதன் முயற்சித்த இந்த புது ஆறு பள்ளத்திலிருந்து மேடு நோக்கி ஓடும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
விவசாய பாசனத்திற்காக உருவாக்கப்பட்ட கல்லணை கால்வாய், தன் நோக்கத்திலிருந்து சிறிதும் தவறாமல் தன்னுள் சுமந்து செல்லும் தண்ணீரை பாசனக்குளங்களுக்கு கொண்டு சேர்க்கிறது. குளங்கள் நிரம்பிய பின்னர் மீதமாகும் தண்ணீர் மீண்டும் கால்வாய்க்குள் வந்து சேரும் படி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த ஆறு தன் வழியில் ஓடும் காட்டாறுகளுக்கு தலைதாழ்த்தி தனக்கு மேல், மேல்நிலை கால்வாய் வழியாக வழி விட்டும், கழிவு நீர் கலக்காத வகையில் "சைபன்" எனப்படும் சுரங்கங்களுக்குள் பதுங்கியும் ஓடுவது ஆச்சரியமான அதிசயம். அதேபோல் வெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் அளவை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் ‘டிராப்’ எனப்படும் நீரொழுகிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்தின் உதாரணம்!
தஞ்சாவூரின் தென்பகுதி, ஒரத்தநாடு தாலுகா, பட்டுக்கோட்டை தாலுகா, போராவூரணி தாலுகா புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி தாலுகா மணல்மேல்குடி, நாககுடி வரையான பகுதிகளிலுள்ள 2.50 லட்சம் ஏக்கர் பரப்பளவு பாசனம் பெறுகிறது என்கிறார் விவசாய சங்க மாநில செயலாளர் சாமி நடராஜன்.
ஒரு காலத்தில் மானாவாரி நிலமாக இருந்த தெற்கு தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதிகள், கல்லணை கால்வாய் வந்த பிறகு நெல் விளையும் பூமியாக மாறியது. தண்ணீர் தட்டுப்பாடு வந்த காலத்தில் கால்வாய் மூலம் கிடைக்கப்பெற்ற நிலத்தடி நீரால் விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறினர் என, வரலாறு கூறி சிலாகிக்கிறார் விவசாயி கண்ணன்.
கடந்த 85 ஆண்டுகளாய், 4 ஆயிரம் கன அடி தண்ணீரை சுமந்தோடிக் களைத்த கல்லணை கால்வாய், இன்றுத் தன் கடைமடைப் பகுதி கரைகளில் கொஞ்சம் வலுவிழந்திருக்கிறது. தெற்குத் தஞ்சை வளமான கதையையும், நதி சுமந்தோடும் கதைகளையும் அடுத்த தலைமுறைக்கும் கடத்த, சற்றே மூப்படைந்திருக்கும் இக்கால்வாயினை சீர் செய்ய வேண்டியது அரசின் கடமை.
இதையும் படிங்க:'ஏற்றுமதிக்கு அரசு உதவ வேண்டும்’- கூக்குரலிடும் வீணை வடிவமைப்பாளர்கள்!