தஞ்சாவூர் மாவட்டம் பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்த ஆனந்த், சித்திரவள்ளி தம்பதியின் மகன் ஆசிய்வ்(9). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் ஆசிய்வ் தனது கண்களைக் கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டும் நிகழ்வை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெறச்செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டடுவந்தார்.
இதையடுத்து இந்த சாதனைக்காகத் தயாரான அவர், பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து, திருச்சிற்றம்பலம் வரையிலும் தனது கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் முயற்சியில் ஈடுபட்டார். இந்நிகழ்ச்சியை மாவட்ட காவல் துறை துணை கண்காணிப்பாளர் கணேசமூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அங்கிருந்து புறப்பட்டு மணிக்கூண்டு, காந்தி சிலை, அண்ணா சிலை, சாமியார் மடம், தலைமை தபால் நிலையம், மணிக்கூண்டு, அதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வழியாக சென்று திருச்சிற்றம்பலம் என்ற ஊரில் நிறைவு செய்தார்.
மொத்தம் 32.1 கிலோ மீட்டர் தூரத்தை 1 மணி நேரம் 49 நிமிடத்தில் கடந்து இந்தியா புக் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து ஆசிய்வ் அசத்தியுள்ளார். மேலும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் அதன் கண்காணிப்பாளர் ஹரிஷ், ஆசிய்விடம் சான்றிதழை வழங்கினார்.
மாணவர் ஆசிய்வ் இச்சாதனையை படைப்பதற்கு பட்டுக்கோட்டை காவல் துறையினர் போக்குவரத்து நெரிசலை சரி செய்து பாதுகாப்பு வழங்கினர். எட்டு கிலோ மீட்டர் தூரம் என்பது இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இன் முந்தைய சாதனை, அதனை தற்போது இந்த மாணவர் முறியடித்து சாதனைப்படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தங்கம் வென்று அசத்திய சவுரப் சவுத்ரி!