தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் சரகம், மேலானமேடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவருக்கும், இராஜேந்திரன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை தொடர்பாக 15 ஆண்டுகளாக முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், அவ்வப்போது இரு குடும்பத்தினரும் தங்களுக்குள் மோதிக்கொண்ட சம்பவத்தின் ஒருபகுதியாக, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இராஜேந்திரன் குடும்பத்தினர் திருஞானசம்பந்தத்தை அரிவாளால் வெட்டியுள்ளனர். இவை குறித்து ஏற்கனவே சோழபுரம் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்ட போதிலும் போலீசார் சரிவர கண்டுகொள்ளாமல் விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (ஜன.10) இராஜேந்திரன் குடும்பத்தை சேர்ந்த சிலர், மண்ணியாற்றங்கரையில், சென்று கொண்டிருந்த திருஞானசம்பந்தத்தை வழி மறித்து வெட்டி படுகொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த சோழபுரம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து உடற்கூராய்விற்காக கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, திருஞானசம்பந்தத்தின் குடும்பத்தினர், உறவினர்கள், மேலானமேடு கிராமத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி, அப்போது சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கோஷமிட்டனர்.
இதற்கிடையே கும்பகோணம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரசம் பேசி, இவ்வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் ஏற்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக புதுச்சேரியில் போராட்டம்