கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சென்னையில் உள்ள லேத் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் கோயில் திருவிழாவிற்காக ஊருக்கு வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் ஒன் மாணவி தனது வீட்டின் பின்புறம் குளித்துக்கொண்டிருக்கும்போது மறைந்து இருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்ததுடன், அதனை காண்பித்து, மாணவியை பாலியல் தொந்தரவும் கொடுத்துள்ளார்.
ஆனால், மாணவி வீடியோ எடுத்த நபரின் ஆசைக்கு இணங்காத நிலையில், ஆத்திரமுற்ற அவர் அந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். இது பற்றி அறிந்த மாணவியின் பெற்றோர் வீடியோ எடுத்த நபரின் தந்தையிடம் முறையிட்டபோது, அவரின் தந்தை மிகவும் திமிராக, 'என் மகன் அப்படித்தான் செய்வான்' என்றதுடன், வந்தவர்களை அவமதித்து, தகாத வார்த்தைகளால் திட்டி திருப்பி அனுப்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர் இது குறித்து அப்பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியினையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கழிவறைக்கு சென்ற பெண்களை செல்போனில் படம்பிடித்த இளைஞர் கைது