தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பெரமையன். இவர் நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று இரவு பெரமையன் பணி முடிந்து வீட்டிற்கு சென்றபோது, அவ்வழியாக மயில் பாளையம் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மது போதையில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, வேல்முருகனுக்கும் பெரமையனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், மதுபாட்டிலால் பெரமையனை தாக்கியுள்ளார். அதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட, அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தூய்மைப் பணியாளர்கள், பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிந்து வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தூய்மைப் பணியாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:உதவி வேளாண் அலுவலர் தற்கொலை: காவல் துறை விசாரணை!