பெரும்பாலான வயது முதிர்ந்தோர் சாலையோரங்களில் ஆதரவற்று இருப்பதையும், கடைசிக் காலங்களில் கூலி வேலைக்குச் செல்வதையும் நாம் பார்த்திருப்போம். தங்களைப் பாராட்டி, சீராட்டி வளர்த்த பெற்றோரைத் தொந்தரவாக நினைக்கும் பிள்ளைகளுக்கு நடுவில் தன்னுடைய பெற்றோருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்திவருகிறார் விவசாயி கருப்பையன்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள கூப்பிளிக்காடு கிராமத்தைச் சேர்ந்த நடேசன், ராஜாமணி தம்பதியினரின் 5 மகன்களில் ஒருவர்தான் கருப்பையன். இவருக்கு பெரமையன், ராஜாக்கண்ணு, மாரிமுத்து, சவுந்தர்ராஜன் ஆகிய 4 சகோதர்கள் உள்ளனர். செல்வச் செழிப்போடு பிள்ளைகளை வளர்க்கவில்லையென்றாலும், கருப்பையனின் பெற்றோர் அன்பை அள்ளிக் கொடுத்துள்ளனர்.
கடைக்குட்டியான கருப்பையன் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்துவிட்டார். பின்னர் ராஜாமணி தந்தையில்லாக் குறை போக்கும் வண்ணம் பிள்ளைகளை வளர்த்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ராஜாமணியும் இவ்வுலகைவிட்டு பிரிந்தார். தாயும், தந்தையும் தன்னைவிட்டு அகன்றாலும் அவர்களின் நினைவு கருப்பையனின் இதயத்தைவிட்டு நீங்கவில்லை.
அவர்களின் நினைவாக எதையாவது செய்ய வேண்டும் என நினைத்த கருப்பையன், ‘தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை தெய்வங்களுக்கு நிகராக’ உயர்த்த வேண்டி கோயிலைக் கட்டியெழுப்பினார்.
சிறு விவசாயியாகிய கருப்பையன் இந்தக் கோயிலைக் கட்ட 3 லட்சம் ரூபாயைச் செலவு செய்துள்ளார். இந்தக் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் செய்து தாய், தந்தையின் புகைப்படங்களுக்கு பூஜை செய்துவருகிறார். ஏழைகளின் பசியாற்றும் விதமாக அன்னதானமும் செய்துவருகிறார்.
இதுகுறித்து அப்பகுதியினர் தெரிவிக்கும்போது, நடேசன் - ராஜாமணி தம்பதியினருக்கு மகன்கள், பேரன் - பேத்திகள் என 85 பேர் உள்ளனர். அனைவருக்குமே நடேசன் - ராஜாமணி மீது அளாதி பிரியம், என்கின்றனர்.
இதையும் படிங்க: செயலி தடையோடு நாட்டின் பாதுகாப்பையும் பலப்படுத்துங்கள் - கபில் சிபல்