கும்பகோணத்தில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழி கேரி பைகள், கப்புகள், தட்டுகள் ஆகியவற்றை அனுமதியின்றி உற்பத்தி செய்துவருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது.
தகவலையடுத்து நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் திடீரென நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நிறுவனங்களில் சோதனையிட்டனர்.
அப்போது, பட்டம் சந்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருட்களான கப்புகள், தட்டுகளை உற்பத்தி செய்த நிறுவனத்திலிருந்த பொருட்களை பறிமுதல் செய்து நிறுவனத்திற்கு சீல் வைத்தனர்.
இதே போன்று, காமாட்சி ஜோசியர் தெருவிலுள்ள நெகிழிப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்திலிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்தச் சோதனைகளின் மூலம், ஐந்து டன் எடையுள்ள ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்நிறுவனங்கள் மீது ரூ. 1.50 லட்சம் அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
மேலும், நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை, உற்பத்தி செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன், கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும் என நகர் நல அலுவலர் பிரேமா தெரிவித்தார்.