கும்பகோணம் அருகே குப்பாங்குளம் கிளாரட் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (40). இவர் வழக்குரைஞராகவும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தஞ்சாவூர் கிழக்கு வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் இருந்தார்.
இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் ராஜவேலு என்பவருக்கும் சொத்தைப் பிரிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இது தொடர்பாக கடந்த 15 நாள்களுக்கு முன்னர் நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டதில் ராஜவேலுவின் கைவிரலை காமராஜ் கடித்தாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்றிரவு காமராஜூம் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) அவ்வூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் இருவரையும் வழிமறித்து அரிவாளால் வெட்டினர்.
இந்தத் தாக்குதலைச் சற்றும் எதிர்பாராத இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு நாச்சியார்கோவில் காவல் துறையினர் வந்து உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காகக் கொண்டு சென்றனர். அப்போது உறவினர்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கும்பகோணம் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காவல் துறையினர் சமாதானம் செய்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. உடற்கூறாய்வு முடிந்த பின்னர் உறவினர்களிடம் இருவரது உடலும் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. ஜெயராமன், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஸ்முக் சேகர் சஞ்சய் ஆகியோர் கும்பகோணத்தில் முகாமிட்டு இவ்வழக்கில் தொடர்புடையவர்களான ராஜவேலு மகன் ஆனந்த், அவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜசேகர், சசிகுமார், சம்பத் ஆகிய நான்கு பேரையும் நாச்சியார்கோவில் காவல் துறையினர் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் படிங்க: ஓசூர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட இருவர் கைது!