தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் 20 ஊராட்சிமன்றத் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் 589 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு 4 ஆயிரத்து 569 பேர் வேட்புமனு தாக்கல் செய்து களத்தில் போட்டியிடுகின்றனர். அதில் கும்பகோணம், பாபநாசம், அம்மாபேட்டை ஆகிய ஒன்றியங்களிலுள்ள இலுப்பக்கோரை, இரும்புதலை, பெருமாக்கநல்லூர் உள்ளிட்ட 20 ஊராட்சிமன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
இதில், கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள முருகனை, அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், தனது பகுதியில் சொந்த செலவில் திருமண மண்டபம், பள்ளிக்கூடம், 500 குடிசை வீடுகளை அகற்றிவிட்டு புதிய கான்கிரிட் வீடுகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க: சிறப்பு குறைதீர் முகாம்: நலத்திட்ட உதவிகள் வழங்கிய கே.சி. வீரமணி!