தென்காசி: ஓவியத்தின் வரலாறு வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதர்கள் உருவாக்கிய கலைப் பொருட்களில் இருந்தே தொடங்குவதுடன், எல்லாப் பண்பாடுகளையும் தழுவியுள்ளது. இந்திய வரலாற்றில் ஓவியங்கள் கடவுளரையும், அரசர்களையும் காட்டுவனவாகவே இருக்கின்றன. மனித மனங்களை வெளிப்படுத்த உதவும் விந்தை மொழி ஓவியம். அந்த வகையில் புது திறமையைப் பெற்றுள்ளார், இந்த தென்காசி ஓவியர்.
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தன் திறமையால் சிற்பங்களை, ஓவியமாக்கும் செயலை செய்து வருகிறார். இதற்கான அங்கீகாரத்தை வழங்குமாறு தமிழக அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம், இலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர், நாகராஜ். இவர் தனது படிப்பினை முடித்துவிட்டு தற்போது லைசென்ஸ் சர்வேயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சிற்பங்களின் மீது அதிகமாக ஆர்வம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நாகராஜ் சிற்பக் கலைகளின் வடிவங்களை, தன் கையால் வரைந்து நல்ல முறையில் அதனை தன் வீட்டில் உள்ள சுவற்றில் மாட்டி வந்துள்ளார்.
இதுமட்டுமின்றி தான் வரைந்த படங்களை மற்றவர்களுக்கும் கொடுத்து வருகிறார். இதனைக் கடந்த ஐந்து வருடங்களாக நாகராஜ் செய்து வருகிறார். இவர் தனது திறமையால் சிற்பங்களை ஓவியத்தின் மூலமாக கலை நயத்துடன் வரைந்து அசத்தி வருகிறார். தான் பார்க்கக்கூடிய எந்த ஒரு சிற்பமாக இருந்தாலும் அதனை அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்குள் படத்தில் அல்லது நேரில் உள்ளவாறே வரைந்து கொடுக்கக்கூடிய திறமையைப் பெற்றுள்ளார்.
பல கலைஞர்கள் வெவ்வேறு விதமாக இந்த கலையில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமா நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், பொருட்கள், தனக்குப் பிடித்தமானவர்களின் முகங்கள் என பல விதமாக வரைந்து வருகின்றனர். ஆனால் இவர் வித்தியாசமாக கோயிலில் உள்ள சிற்பங்களை வரைவதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தன் திறமையை வெளிக்காட்டும் விதமாக தான் வரைந்த ஓவியங்களை கண்காட்சி முகாம்கள் அமைத்து அதன் வழியாக காண்பித்து வருகிறார்.
திருப்பூர், கோயம்புத்தூர், திருநெல்வேலி என பல்வேறு இடங்களில் இவர் ஓவியத் திறமையை கண்காட்சி வழியாக காண்பித்து வருகிரார். எவ்வளவோ இடைஞ்சல்கள் வந்தாலும் தனக்குப் பிடித்தமான இந்த வேலையை விடாமல் பார்த்து வருகிறார்.
மேலும் அவரிடம் பேசியபோது, ''இந்த ஓவியக்கலை அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். என்னை போலவே பல இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கான அங்கீகாரம் கிடைக்கப்படாததால் ஒரு சில நேரங்களில் அவர்களின் திறமையை கைவிடவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
இதுபோன்ற தனித் திறமைகளைப் பாதுகாக்கும் விதமாக ஒவ்வொரு கிராமப் பகுதிகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய என்னைப் போல திறமைகளைப் பெற்ற இளைஞர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, தமிழக அரசு அவர்களுக்கு அங்கீகாரம் அழிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் கிராமப் பகுதியில் இருக்கும் இது போன்ற திறமையான இளைஞர்கள் முன்னேற்றம் அடைவதற்கு ஏதாவது ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.