தென்காசி: சங்கரன்கோவில் அருகே மலையான்குளத்தில் தனியார் நூற்பாலை உள்ளது. இந்த நூற்பாலையில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்துவந்தனர். இங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்குக் கடந்த ஐந்து ஆண்டுகளாக சம்பள உயர்வு, விருப்ப ஓய்வு, பணிக்கொடை வருங்கால வைப்புநிதி ஆகியவை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்டோர் ஆலையின் உள்ளே அமர்ந்து போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களுக்கு டிசம்பர் 30ஆம் தேதிக்குள் பணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நூற்பாலை நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று தொழிலாளர்கள் தங்களுக்குப் பணிக்கொடை, வருங்கால வைப்புநிதி, விருப்ப ஓய்வு வழங்கக் கோரி 50 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நூற்பாலையின் நுழைவுவாயிலில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதையொட்டி அங்கு காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று மாலை (டிசம்பர் 30) ஐந்து மணியளவில் தொடங்கிய உள்ளிருப்புப் போராட்டம் நள்ளிரவிலும் நீடித்துவருகிறது.
கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது தொழிலாளர்கள் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், தற்பொழுதுவரை இந்தப் போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு தலைமை நிர்வாக அலுவலர் நியமனம்