தென்காசி: சங்கரன்கோவில் அருகே முத்துசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர் எம்.என்.வின்சியா சாரிட்டபிள் டிரஸ்ட் என்கிற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார். இந்த அறக்கட்டளையின் தலைமை அலுவலகம் கோயம்புத்தூரில் உள்ளது. இந்த அறக்கட்டளை தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழலை வலியுறுத்தும் வகையில் மரக்கன்றுகளை வளர்க்கவும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வேலை வாங்கி தருவதாக மோசடி: இந்நிலையில், அறக்கட்டளை மூலம் வேலை வாங்கி தருவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அதன் நிறுவனர் முத்துராஜிடம் பெருங்கோட்டூரைச் சேர்ந்த மதி என்பவர் ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார். அத்துடன் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்பட 18 பேரிடம் தலா ரூ.3 லட்சம் வீதம் வாங்கி அதையும் முத்துராஜிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஒரு வருடம் ஆகியும் அவர்களுக்கு வேலை வழங்கப்படாததால் மதி, முத்துராஜை தொடர்புகொண்டு பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டதாகக் கூறப்படுகிறது.
நடவடிக்கை எடுக்காத போலீசார்: அதுகுறித்து அவர் எந்த பதிலும் தெரிவிக்காததால், மதி மற்றும் அவரிடம் பணம் கொடுத்த பலரும் கடந்த 2021 செப்டம்பர் மாதம் சேர்ந்தமரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், பின்னர் 2021 டிசம்பர் மாதம் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். அந்த புகாருக்கும், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லாததால் மனமுடைந்த மதி, நேற்று (ஏப்.9) கக்கன் நகர் பகுதியில் உள்ள செல்ஃபோன் டவரில் ஏறி அதன் உச்சிக்கு சென்று போராட்டம் நடத்தினார்.
செல்ஃபோன் டவரில் ஏறி ஆர்ப்பாட்டம்: பல லட்சம் மோசடி செய்த நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், நடவடிக்கை எடுக்காத காவல் துறையை கண்டித்தும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து, தகவல் அறிந்த காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து சென்று அவரைக் கீழே இறங்குமாறு கூறினர். அப்போது இடியுடன் கூடிய காற்றும் கனமழையும் பெய்ததால் அவரை கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர். அதன்பிறகு அவர் செல்ஃபோன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். உடனே காவலர்கள் அவரை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, அவரது கோரிக்கை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி - தம்பதி கைது