தென்காசி: கேரளா மாநிலத்தை சேர்ந்த மஞ்சு (40), கடந்த சில வருடங்களாக தென்காசியில் தனியாக வீடு எடுத்து வசித்து வருகிறார். நேற்று (மார்ச் 9) காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது மஞ்சுவின் வாகனத்தில் ஏர் பிஸ்டல் ரகத்தை சேர்ந்த கைதுப்பாக்கி இருந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவரை காவல்துறையினர் கைதுசெய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், மஞ்சு தென்காசியில் உள்ள தொழிலதிபர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆசை வார்த்தைகளுடன் பேசி பழகி வந்துள்ளார் என்பதும், தனது வீட்டிற்கு அவர்களை அழைத்து நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து மிரட்டி பணம் பறித்துவந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும், பணம் தராதவர்களிடம் கைதுப்பாக்கியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் மஞ்சுவின் காரை பறிமுதல் செய்து, அவர்மீது வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.