தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் பழனி நாடார் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து கூட்டணி கட்சித் தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவரும் நிலையில், இன்று (மார்ச்.27) தென்காசி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக, விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பழனி நாடாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,"இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுவருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் 13 பேர் படுகொலை, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் படுகொலை, பொள்ளாச்சி பாலியல் வழக்கு என அடுக்கடுக்கான கொடுமைகளையும் செய்துகொண்டு, மறு பக்கம் கோடி கோடியாக கொள்ளை அடிக்கும் ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு அகில இந்திய தேர்வாணையம் மூலம் இடங்களை நிரப்புகிறது. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம் என இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைத்து ஒற்றைத் தன்மையை கொண்டு வர முயல்கிறது. இந்த பாஜகவின் கொத்தடிமை வேலைகளை அதிமுக செய்கிறது.
தமிழ்நாட்டின் பெருமைகளை சிதைத்து பாஜகவை நிலைநாட்டிட வேண்டும் என அதிமுக முயற்சி செய்கிறது. எனவே தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி அமைய திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவை உடைத்துவிடும்; ஒற்றுமையை சிதைத்துவிடும்!