தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பொது இடங்கள், வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருடப்பட்டு வந்தது.
இது தொடர்பாக தென்காசி, சுரண்டை, கடையநல்லூர் காவல் நிலையங்களில் எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, தென்காசி டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மாதவன், மாரிமுத்து, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் முத்துராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் தனிப்படை காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வாகன எண் பொருத்தப்படாத இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரனை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ஊர்மேனியழகியான் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (26), முத்துக்குமரன் (31) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்த எட்டு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கன்னியாகுமரி டாஸ்மாக் கடையில் திருட்டு