தென்காசி: இலஞ்சி அடுத்த கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத். சிறுவயதில் இருந்தே அதே பகுதியைச் சேர்ந்த மரஅறுவை ஆலை அதிபர் நவீன் படேல் என்பவரின் மகள் கிருத்திகாவை காதலித்து வந்துள்ளார். என்ஜினியரான வினீத் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
தனது நீண்ட நாள் காதலி கிருத்திகா குறித்து தன் வீட்டில் கூறிய வினீத் திருமணத்திற்கு ஒப்புதல் வாங்கியுள்ளார். ஆனால் இவர்களின் காதலை கிருத்திகாவின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் வினீத் கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி காதலி கிருத்திகாவை பதிவு திருமணம் செய்து கொண்டார்.
மேலும் பெண் வீட்டார் தரப்பில் இருந்து தங்களுக்கு ஏதாவது ஆபத்து நேரலாம் என்று தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று குற்றாலம் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டுள்ளார்கள். இதற்கிடையே கடந்த வாரம் தென்காசி குத்துக்கல்வலசை எனும் இடத்தில் தங்கள் உறவினர் வீட்டில் இருந்த வினீத், கிருத்திகா தம்பதியை கிருத்திகாவின் பெற்றோர் சில அடியாட்கள் வந்து கடுமையாக தாக்கியுள்ளனர்.
அந்த கும்பல் வினீத்தின் கண் முன்னே அவரது மனைவி கிருத்திகாவை கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து வினித் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் கிருத்திகா தன்னுடன் மட்டுமே இருக்க விரும்புவதாக அவர் எழுதிய கடிதத்தையும் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
வினீத்தின் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றாலம் போலீசார், கிருத்திகாவின் தந்தை நவீன் படேல், தாயார் தர்மிஷா படேல், உறவினர்கள் விஷால், கீர்த்தி படேல், ராஜேஷ் படேல், ராசு, மைதினிக் ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், இளம்பெண் கிருத்திகா, அவரது பெற்றோர் ஆகியோர் குறித்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகா தனக்கு வேறு திருமணம் ஆகி விட்டதாகவும், தான் பெற்றோருடன் பாதுகாப்பாக இருப்பதாகவும் வெளியிட்ட ஆடியோ, இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருத்திகா, வினித்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. இதில் தன் பெற்றோர் மீது தொடரப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் எனவும் வாபஸ் வாங்கும் பட்சத்தில் உனது வாழ்க்கை மற்றும் எனது வாழ்க்கை நன்றாக இருக்கும் என கிருத்திகா பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ஆவணமில்லாத ரூ.20 லட்சம் பறிமுதல்: ஹவாலா பணமா?