தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களக்காடு முதல் குண்டாறு நீர்த்தேக்கம் வரை உள்ள பகுதிகள் காப்புக்காடாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால் குற்றாலம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பாகுதியில் இருக்கும் வன விலங்குகள் தாராளமாய் சுற்றி வருகின்றன.
கேரள வனப்பகுதியிலிருந்து ஏராளமான காட்டு யானைகளும், தமிழ்நாடு வனப்பகுதிக்குள் சர்வ சாதாரணமாக வந்து செல்லும் நிலையும் இருந்து வருகின்றது. கேரள வனப்பகுதியிலிருந்து வந்த யானைக் கூட்டங்கள் தமிழ்நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள மோட்டை பகுதியில் தனியார் நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று(மே18) குற்றாலம் வனப்பகுதியிலிருந்து வந்த சிறுத்தை ஒன்று குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள வாகன நிறுத்துமிடம் பகுதியில் உள்ள பாறையில் உலா வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி வியாபாரிகள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தை வந்து சென்ற பகுதியை பார்வையிட்டு சென்றனர்.
அதற்குள் சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இந்த பகுதியில் கடந்த ஓராண்டு காலமாகவே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகின்றது. தற்போது தொற்று காரணமாக குற்றாலம் மெயின் அருவி பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாமல் இருப்பதால் வனவிலங்குகள் தொடர்ந்து சாதாரணமாக வந்து செல்வது வாடிக்கையாகி உள்ளது. சிறுத்தை குற்றாலம் அருவி பகுதியில் இறங்கி விடாமல் இருப்பதற்கு, வனத்துறையினர் அங்கு முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த பகுதி மக்கள் மற்றும் வியபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:மணல் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேர் கைது