குற்றாலம் : தென்காசியின் முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்தில் கடந்த ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய 3 மாதங்களும் சீசன் ஆகும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை துவங்கியதால் கடந்த ஒரு வாரமாக தென்காசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
மேலும் மாலை நேரத்திற்கு பிறகு மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் கனமழை பெய்து வரும் காரணத்தால் கடந்த 2 நாட்களாகவே இரவில் இருந்து காலை வரை குற்றால அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆகையால் அதிகாலை குற்றாலத்தில் குளிக்க வரும் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
பொதுவாகவே குற்றாலத்திற்கு தென்காசி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவது வழக்கம். ஆனால் இது போல அடிக்கடி நிகழ்வதால் பல சுற்றுலா பயணிகள் நெடுந்தொலைவில் இருந்து வந்தும் குளிக்க முடியாமல் போகிறது.
இந்நிலையில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், எந்தவித அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் குற்றாலத்தில் காலை வரை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து, தற்போது குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு குறைந்து, நீர்வரத்து சமநிலைக்கு வந்த காரணத்தால் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தைப் பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இதேபோன்று ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக கொட்டி வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறந்த கால்பந்து வீரருக்கான Ballon d’Or விருது.. 8வது முறையாக வென்ற மெஸ்ஸி!