தென்காசி, தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றும் பாண்டியம்மாள் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், `அரசு கலைக் கல்லூரிகளில் 2ஆயிரத்து 331 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதியன்று அறிவிப்பு வெளியானது.
தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்துவரும் நான் உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தேன். இந்நிலையில் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிபவர்களை உதவி போராசிரியர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாகவே நிரப்ப வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு விதியில் கூறப்பட்டுள்ளது. இதனால் அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக நியமிக்க தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.
அந்த வழக்கில் என் கோரிக்கையை அரசு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு கல்லூரிகளில் 5 ஆண்டுகளாக கௌரவ விரிவுரையாளர்காக பணிபுரிந்து வருவோர்களை உதவி பேராசிரியர்களாக நியமிப்பதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. இதற்குத் தடை விதிக்க வேண்டும்` எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், கிருஷ்ணவள்ளி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து பள்ளி கல்லூரி கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.