தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள புளியங்குடி சுற்றுவட்டாரப்பகுதியில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து புளியங்குடி பொறுப்பு டிஎஸ்பி சிறப்புப்படை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பல்சர் பைக்கில் மூவர் வந்தனர். அதனை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர்.
அதில் இரண்டு கிலோ 200 கிராம் மதிக்கத்தக்க கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அச்சமயத்தில் சட்டக்கல்லூரி மாணவருடன் வந்த இருவர் காவல் துறையினரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓடினர். சோதனையில் பிடிபட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி பகுதியைச்சேர்ந்த தனுஷ் குமார்(22) என்பது தெரியவந்தது.
மேலும் தப்பி ஓடிய புளியங்குடியைச்சேர்ந்த மணிகண்டன் (எ) மாட்டு ரவி, உள்ளாறு பகுதியைச்சேர்ந்த கார்த்தி(எ) காசிதுரை ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கஞ்சா மற்றும் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட பல்சர் பைக்கையும் காவல்துறையினர் பறிமுதல் செய்து தனுஷ் குமாரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட தனுஷ் குமார் திருநெல்வேலி சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரு சக்கர வாகனங்கள் தொடர் திருட்டு... புகாரின்பேரில் 7 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்... 3 பேர் கைது