தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள ராமாலயம் என்ற பகுதியில் வசித்து வரும் மேற்குவங்கம் பகுதியைச் சேர்ந்த பிரந்தர் சக்கரவர்த்தி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவத்தில் 115 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.20,000 பணம் கொள்ளை போயிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், சிசிடிவி கேமரா காட்சிகளில் பதிவான நபர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, கொள்ளை அடிக்க வந்த நபர் முகக்கவசம் அணிந்தபடி ஒரு காரில் வந்து இறங்கி, கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த கார் கன்னியாகுமரியைச் சேர்ந்த வேல்முருகன் (37) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, கன்னியாகுமரி விரைந்த குற்றாலம் போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, குற்றாலம் பகுதியில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் வேல்முருகன் ஈடுபட்டதும், அவருடன் புதுக்குடியைச் சேர்ந்த டேனியல் பிரகாஷ் (38) மற்றும் வீரவநல்லூரைச் சேர்ந்த மந்திரமூர்த்தி (35) ஆகிய இருவரும் சேர்ந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
மேலும், இவர்கள் மூவர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மூவரும் சிறையில் வைத்து நண்பர்களாக பழகி, பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள்போல் நோட்டமிட்டு தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 78 கிராம் தங்க நகைகள் மற்றும் காரை பறிமுதல் செய்து, மூவரையும் செங்கோட்டை நீதித்துறை நடுவர் சுனில் ராஜா முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காருக்குள் கட்டுகட்டாக பணம்.. பெண் அதிகாரியை சுற்றிவளைத்த லஞ்ச ஒழிப்புத்துறை.. தென்காசியில் நடந்தது என்ன?