தென்காசி: சுற்றுலாத் தலமான குற்றாலத்தில் பழமையானதும், தமிழ்நாட்டின் பஞ்ச சபைகளில் ஒன்றான, சித்திரை சபை அமையப் பெற்றதுமான குற்றால நாதர் ஆலயம் அமைந்துள்ளது. அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோவிலில் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் படி இந்த ஆண்டுக்கான மாா்கழி திருவாதிரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக குற்றால நாத சுவாமி ஆலயத்திற்கு எதிரே உள்ள கொடிமரத்திற்குப் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாள் தோறும் காலை மாலை சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5- ஆம் திருநாளான ஜனவரி 1 - ஆம் தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், ஜனவரி 4-ஆம் தேதியன்று சித்திரசபையில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.
ஜனவரி 6-ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5 மணிக்கு திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை 9.30 மற்றும் இரவு 7 மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: திருவெம்பாவை உற்சவம்: தங்க தேர் புறப்பாடு ரத்து