தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே புதுப்பட்டி செல்லும் சாலையில் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை உள்ளது. இக்கடையில் நேற்று (அக்.5) முதியவர் ஒருவர் 120 ரூபாய் மதிப்பிலான 2 குவாட்டர் பாட்டில் வாங்கியுள்ளார். இதில் பாட்டிலுக்கு 5 ரூபாய் வீதம் 10 ரூபாய் கூடுதலாக கடை ஊழியர் எடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த முதியவர் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பாட்டிலின் விலையை விட கூடுதலாக வசூல் செய்ய காரணம் என்ன? இந்த 5 ரூபாய் யாருக்கெல்லாம் செல்கிறது? எதற்காக எடுக்கிறீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு கடை ஊழியரை மடக்கியுள்ளார்.
ஒரு கட்டத்தில் முதியவரை சமாளிக்க முடியாமல் திணறிய கடை ஊழியர், மேல்மட்ட அலுவலர்களுக்கும், உடைந்த பாட்டில்களுக்கும் எடுக்கப்படுவதாக கூறவே எத்தனை பாட்டில் உடைந்தது கணக்கு காட்டுங்கள் என கேட்டு திணறடித்துள்ளார்.
தலை சுற்றிய கடை ஊழியர் 10 ரூபாயை திருப்பி கொடுத்ததும், சக மதுகுடிப்போர்க்கும் பணத்தை திரும்பி தர வேண்டும் என அவர்களுக்காகவும் சேர்ந்து குரல் எழுப்பினார்.
நீதி கிடைத்த வேகத்தில் கூடுதல் குவாட்டர் வாங்கி புலம்பியடி சென்ற குடிமகனின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க: ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவம் : பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த உத்தரப்பிரதேச அரசு