தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 10 மற்றும் 11ஆம் வகுப்பு வரை பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளுக்கு நாள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பள்ளிகளைத் தற்போது திறக்கும் எண்ணமில்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் ஜூலை 15 முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதன்படி தென்காசி மாவட்டத்திலுள்ள 78 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், 75 அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 153 பள்ளிகளில் பயிலும் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று(ஜூலை 15) நடைபெற்றது.
இதில் மாணவர்களுக்கு தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கருப்பசாமி பாடப்புத்தகங்களை வழங்கினார். மேலும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி மாணவர்களின் நலன் கருதி, ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் வீதம் பாடப்புத்தகம் சமூக இடைவெளியுடன் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விலையில்லா மடிக் கணினியில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்குத் தேவையான பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.