தென்காசி: தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் உள்ள பாரம்பரியமிக்க திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயிலில், வருடம்தோறும் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவானது, கடந்த டிசம்பர் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, சிறப்பாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் இந்த திருவிழாவானது நடைபெற உள்ளது.
இந்த நிலையில், நாள்தோறும் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் நடராஜ மூர்த்தி பக்தர்களுக்கு ரத வீதியில் பவனி வந்து, காட்சி அளித்து வருகிறார். இந்த நிலையில், 5வது நாளான இன்று (டிச.22) நடராஜமூர்த்தி மற்றும் பஞ்ச மூர்த்திகள் அடங்கிய திருத்தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மேலும், ஒரே நேரத்தில் ஐந்து தேர்கள் ஒருங்கிணைந்து பஞ்சமூர்த்திகளின் திருத்தேரோட்ட பவனி தற்போது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து, பஞ்சமூர்த்திகளின் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாது, வெளியூரிலிருந்தும் பொதுமக்கள் மற்றும் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், வருகிற டிசம்பர் 25ஆம் தேதி, 8ஆம் திருநாளன்று சித்திரை சபையில், நடராஜ மூர்த்திக்கு பச்சை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும், அதன்பின் வருகிற 27ஆம் தேதி 10ஆம் திருநாளன்று அதிகாலையில், சித்திர சபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், அதே நாளில் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - பொன்முடி சந்திப்பு! அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?