தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் மாவட்ட நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தென்காசி மாவட்டத்தில் ஒரு வார காலமாக தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், மழை மேலும் தீவிரமடையும் நேரத்தில் அணைகளுக்கு வரும் நீர் முழுவதுமாக திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
எனவே, ஆறுகளின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மழை பொழிவு காரணமாக ஏற்படும் வீடு, குடிசைகள், விவசாய பயிர்கள், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் சேத விவரங்களை தெரிவிக்கவும் அது தொடர்பான உதவிகள் குறித்த கோரிக்கைகளுக்கும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவசரகால செயல்பாட்டு மைய தொலைபேசி எண்ணை 04633 290548 தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.